மத்திய அரசின் அதிக எண்ணிக்கையான புதியவர்களின் உள்வாங்கல் கொள்கையினால், ஆதனத்தை கொள்வனவு செய்வதில் கனடியர்கள் பெருமளவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள் என இரண்டு வருடங்களிற்கு முன்பாக, Federal Public Servants மத்திய அரசிற்கு தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தது. மக்களிற்குப் போதியளவு எண்ணிக்கையான ஆதனங்கள் நிர்மாணம் செய்யப்பவடுவதில்லை என்பதனையும் தெரிவித்து இருந்தது.
எனினும், கனடிய மத்திய அரசு 2025 இல் 500,000 புதியவர்களை உள்வாங்குவது என தீர்மானித்துள்ளது. இந்த பெறுமதி 2015 இன் உள்வாங்கிய புதியவர்களின் எண்ணிக்கையை விட இருமடங்காகும்.
அத்துடன் அதீத மக்கள் தொகை அதிகரிப்பு மக்களின் வாழ்வின் முறையிலும், வாடகையிலும் பெருமளவு பாதிப்பு ஏற்படும் என்பதனையும் தெரிவித்து இருந்தது. அத்துடன் ஆப்கானிஸ்தான், உக்ரேன், பலஸ்ரைன் (Palestine) போன்ற நாடுகளில் ஏற்பட்டு கொண்டு இருக்கும். போர்களினால் மேலதிக மக்களின் வருகையும் கனடாவில் தொழில் தேடுவதிலும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றது.
அத்துடன் அண்மைக் காலங்களில், அதிகளவிலான வெளிநாட்டு மாணவர்களின் வருகை, நிரந்தரமற்ற குடிவரவாளர்களின் வருகை (VISA / Temporary Residents), குறிப்பிட்ட காலத்திற்கு வந்து தொழில் புரிபவர்கள் இது போன்றவைகளினாலும் இருப்பிட நெருக்கடி, அதனால் வாடகை அதிகரிப்பு, கனடியர்களின் வருமானத்தில் பெரும்பகுதி வாடகை அல்லது அடமானக் கடனிற்கு செலுத்த வேண்டியுள்ளது.
எனினும், ஆட்சியில் இருக்கும் லிபரல் அரசு, அதிக மக்களின் வருகையால் கனடாவின் பொருளாதாரம் வளருவதுடன், வயதானவர்களை இவர்களால் நிவர்த்தி செய்ய முடியும் என தெரிவிக்கின்றது.
எனினும், 2025 மற்றும் 2026இலும் புதியவர்களின் வருகை 500,000 இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
2024 இன் ஆரம்ப ஆதன வியாபாரம், சற்று நிலை மாறுவதனைக் காணலாம்.
பொதுவாக ஆண்டு இறுதியில் சந்தைப்படுத்தப்படும் ஆதனங்கள் குறைவாகவே காணப்படும். 2023ஆம் ஆண்டு இதற்கு விதிவிலக்கல்ல.
ரொறொன்ரோ பெரும்பாகத்திலும் கனடாவிலும் 2023ஆம் ஆண்டின் ஆதன வியாபாரம் மிகவும் நெருக்கடியாகவே காணப்பட்டது. மொத்தமாக ரொறொன்ரோ பெரும்பாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் 65,982 ஆதனங்களே கைமாறியுள்ளன. 2022இல் 75,140 ஆதனங்கள் கைமாறின. மேலும், 2021 இல் 121,630 ஆதனங்கள் கைமாறின. 2021ஆம் ஆண்டோ இதுவரையில் அதிக ஆதனங்கள் விற்று வாங்கப்பட்ட ஆண்டாக ரொறொன்ரோ பெரும்பாகத்தின் சரித்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 2023இல் சராசரி விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பதனையும் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது கனடியர்கள் ஆதனத்தை நிச்சயமாக விற்கவேண்டிய நிலையில் இல்லை. அத்துடன் புதிதாக நிர்மாணம் செய்யும் நிறுவனங்களும் தமது புதிய வருகை மனைகள் தொகுதிகளை (New Condo Projects) பிற்போட்டுள்ளன.
2023 இன் இறுதிகாலப் பகுதியில், பெறுமதியான ஆதனங்கள் சந்தைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தகுந்த வாங்குநர்கள் கிடைக்காததால் பல ஆதனங்கள் 2023 இன் இறுதிப் பகுதியில் சந்தையிலிருநுது உரிமையாளர்களால் அகற்றப்பட்டு இருந்தன.
இவை இப்பொழுது மீண்டும் சந்தைப்படுத்தப்படுவதனைக் காணலாம். அத்துடன் பல விற்கப்பட்டும் உள்ளன. நீண்ட கால அடமானக் கடனில் இப்பொழுது ஏற்பட்ட இறக்கமும், வாங்குபவர்களிற்கு சாதகமாக தெரிகின்றது.
அடுக்குமாடி மனைகளில், முதலீட்டாளர்களின் நாட்டம் பெரியளவில் குறைந்துள்ளது. மேலும், பல முதலீட்டாளர்களின், தம்மிடம் இருக்கும் அடுக்குமனைகளை இப்பொழுது விற்பதனையும் காணலாம்.
இதற்கு தகுந்த வாடகையாளர்களை தமது ஆதனத்திற்கு தெரிவு செய்வதிலும், அரசுகளின் வாடகையாளர்களின் மேலதிக சார்புக் கொள்கைகளும் முதலீட்டாளர்கள், ஆதன முதலீட்டை தவிர்த்து வேறுவிதமான முதலீடுகளை நோக்கி நகர்வதனையும் காணக்கூடியதாக உள்ளது.
டிசெம்பர் 2023, அடுக்குமனை வியாபாரம் ரொறொன்ரோ பெரும்பாகத்தின் வியாபார சரித்திரத்தில் குறைவாக காணப்பட்டது. ஜனவரி 2021 இற்கு பிற்பாடு, டிசெம்பர் 2023, முதல் தடவையாக, ரொறொன்ரோவின் மத்தியப்பகுதியில் சராசரியாக ஒரு சதுரஅடியின் விலை $1000 ($997 சதுரஅடி) இற்கு சற்று குறைவாக காணப்பட்டது.
2022 பெப்ரவரியில் இந்த பெறுமதி $1203 ஆகக்காணப்பட்டது. ஏறக்குறைய 17% குறைவானது. எனினும், ரொறொன்ரோவில் இந்த பெறுமதி 4.2% ஆகவே காணப்படுகின்றது.
2022/2023 இல் குறைந்தளவு அடுக்குமனை மாடிகளே விற்பனைக்காக சந்தைப்படுத்தப்பட்டதனால் 2026/2027 ஆண்டுகளில் சந்தைக்கு வரும் மனைகள் குறைவாக இருக்கும். இதனால் அப்பொழுது வாடகைக்கு பெறுவதில் நெருக்கடி ஏற்படும் என்பதனையும் நாம் எதிர்பார்க்கலாம்.
அத்துடன் வட்டிவீத இறக்கத்தை 2024இல் நிச்சயம் எதிர்பார்க்கலாம். இதனால் 2024ஆம் ஆண்டில் ஆதன வியாபாரம், 2023 ஆம் ஆண்டைவிட நிச்சயமாக சிறப்பாக இருக்கும் என்பதனை கூற முடியும்.