இறைவனின் படைப்பில் சகலதும், சகலரும் சமமல்ல. அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப செயல்பாடுகள் மாறுபடும்; இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஆதனத்தை வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளர்களிற்கும் வாடகைக்கு பெறுபவர்களிற்கும், இன்றைய காலத்தில் சிறப்பாக இந்த வார்த்தை பிரயோகம் பொருந்தும். நியாயமானவர்கள் அதிகமாகக் காணப்படுவது இயல்பு. ஒரு குறிப்பிட்ட மிகச்சிறிய நியாயமற்ற வாடகையாளர்களும், ஆதன உரிமையாளர்களும் உள்ளார்கள். சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை கண்டறிந்து இரு சார்பாலர்களும் தமக்கு ஏற்ற மாதிரி பாவிப்பதால் தான் சிக்கல்கள், ஆரம்பிக்கின்றன. இதனால் ஒரு சிலர் ஆதாயம் பெறுவார்கள்; பலர் பாதிப்படைவார்கள்.
இந்த சந்தர்ப்பங்களில் அரசுகள் தமது இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களிற்கு தள்ளப்படுகின்றன.
இது கனடிய மாகாணங்களிற்கும் பொருந்தும், உள்ளூராட்சி அரசுகளிற்கு பொருந்தும்.
2017-2018 ஆம் ஆண்டுகளில் கனடியர்கள் வாடகைக்கு பெறுவதில் மிகச் சிரமத்தை அடைந்தார்கள். 2023-2024 இலும் தொடர்கின்றது. சில கண்ணியமற்ற (Unsrupulous) ஆதன உரிமையாளர்களின் நியாயமற்ற மாதாந்த வாடகை அதிகரிப்பால், அந்த ஆண்டுகளில் பல வாடகையாளர்கள் தமது வாடகை இடத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இதனால் 2017-2018 ஆண்டுகளில் பலர், இவ்வாறான நெருக்கடியால் ஒன்றாரியோவை (Ontario) விட்டு வெவ்வேறு மாகாணங்களிற்கு சென்ற கவலையான நிகழ்வுகளையும் காணக்கூடியதாக இருந்தது.
இதனைக் கட்டுப்படுத்த அப்பொழுது ஆட்சியிலிருந்த லிபரல் (Liberal) அரசு வாடகை அதிகரிப்பை மட்டுப்படுத்தியது. அதாவது ஏற்கனவே இருந்த வாடகை கட்டுப்பாட்டு அதிகரிப்பை மட்டுப்படுத்துவதற்காக The Rental Fairness Act, 2017 ஐ லிபரல் அரசு நடைமுறைப்படுத்தியது.
ஏப்ரல் 20, 2017 இலிருந்து ஆதன உரிமையாளர்கள் வாடகையை, அரசினால் தெரியப்படுத்தப்படுப்படும் வாடகை அளவை விட மேலதிகமாக அதிகரிக்க முடியாது என கொண்டு வந்தது. (2017 இன் அதிகூடிய வாடகை அதிகரிப்பு 1.5%)
வாடகையாளர்களை பாதுகாப்பதற்காக வேறுபல புதிய பிரிவுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனால், ஆதன உரிமையாளர்கள், ஆதனத்தில் முதலிடுவதனை குறைக்க தொடங்கினார்கள். வாடகைக்கு ஆதனம் பெறுவதில் சிறிது சிறிதாக சிக்கல்கள் மேலும் ஏற்படத் தொடங்கியது.
நிலைமை மாறியதனை காணக்கூடியதாக இருந்தது. 2018இல் அரசு மாறியது. பழமைவாத கட்சி ஆட்சி அமைத்தது. இந்த அரசு பொதுவாக வசதி படைத்தவர்களிற்கு சார்பானது என்ற எண்ணக்கருத்தை உலகளாவிய மக்கள் கொண்டுள்ளார்கள்.
புதிய அரசினால் நவம்பர் 15, 2018 இலிருந்து வாடகை அதிகரிப்பிற்கு புதுவடிவம் கொடுக்கப்பட்டது.
நவம்பர் 15, 2018இற்கு பின்பாக குடிபுகும் வீடு மனைகளிற்கு வாடகை அதிகரிப்பிற்குரிய உச்ச வரம்பு முற்றாக நீக்கப்பட்டது.
புதிதாக பல ஆதனங்களை உருவாக்க கூடிய முதலாளிமார்களை (Investors) ஊக்குவிப்பதற்காகவே இந்த சட்ட மாற்றம் ஏற்படுத்தியதாக பழமைவாதக் கட்சியின் மாகாண முதல்வர் திரு. டக் போட் (Doug Ford) தெரிவித்திருந்தார்.
புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டு, ஏற்கனவே இருந்த மனைகள் மற்றும் வீடுகளிற்கு மேலதிகமாக சேர்க்கப்பட்ட பகுதிகளிற்கும் இந்த வாடகை அதிகரிப்பு எல்லை இருக்காது. இதனால், ஆதனத்தில் முதலீடு செய்பவர்கள் நவம்பர 15, 2018 இற்கு பிற்பாடு கிரகப்பிரவேசம் (Occupancy) பெற்ற மனைகள் மற்றும் வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதனையும் காணலாம்.
இதனால் புதிய விதமான சிக்கல்கள் முதலீட்டாளர்களான ஆதன உரிமையாளர்களிற்கு ஏற்பட்டுள்ளது.
இந்த திகதிக்கு முற்பட்ட வீடு மற்றும் மனையை உரிமை கொண்டவர்களின் அண்மைக்கால வட்டிவீத அதிகரிப்பினால் வாடகை வருமானத்தைவிட மாதாந்த அடமானக் கொடுப்பனவு மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.
மாதாமாதம் உரிமையாளர்களின் கொடுப்பனவில் பெரிய இழப்பீடு ஏற்படுவதனைக் காணலாம்.
கடந்த சில வருடங்களாக வருடாந்த வாடகை அதிகரிப்பு 2.5% ஆகவே உள்ளது. 2024ஆம் ஆண்டும் 2.5% ஆகவே உள்ளது.
இந்நிலைமை வாடகைக்கு இருப்பவர்களிற்கு சாதகமாக இருப்பதனால், உரிமையாளர்கள் சிரமப்படுவதனைக் காணலாம். அத்துடன் இப்பொழுதுள்ள சட்டங்கள் வாடகையாளருக்கு சிறப்பாக இருப்பதனால், வாடகையாளர்கள் தமக்கு சாதகமாக இதனைப் பாவிக்கின்றார்கள். உதாரணமாக Professional Tenant என அழைக்கப்படும் வாடகையாளர்கள், இவர்களிற்கு சட்டத்திலுள்ள ஓட்டைகள் மற்றும் சட்டத்தை தமக்கு ஏற்ற மாதிரி எவ்வாறு பாவிக்லாம் என முற்றாக அறிந்துள்ளார்கள். இதனால், ஆதன உரிமையாளர்களிற்கு மிகவும் நஷ்டம் மற்றும் மனக்கஷ்டம் ஏற்படுவதனை காணலாம்.
தமது ஆதனத்தை வாடகைக்கு கொடுக்கும் முன்பு தகுந்த வாடகையாளர்களை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆதன உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஒரு தரமற்ற வாடகையாளரை ஆதனத்திற்குள் குடியேற விட்டால், அவர்களை வெளியேற்றுவது என்பது இலகுவல்ல. பல மாதங்கள்/வருடங்கள் வருமானமற்ற வாடகையாளரை வைத்திருக்க வேண்டிய நிலைமையும் ஏற்படலாம். இதனால் சிலர் தமது ஆதனங்களை இழக்க வேண்டியும் உள்ளது.
இவ்வாறான நிலையில் தரமான, நியாயமான, வாடகையாளரை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
அண்மைக்காலமாக “OPEN ROOM” (www.openroom.ca) என்ற இணையதளத்தில் உரிமையாளர்களும், வாடகையாளரும் நெருக்கடியில் உள்ளவரின் பெயர்களைக் காணலாம். இதனால் வாடகைக்கு கொடுக்கும்முன்பு, இந்த இணையதளத்திற்கு சென்று குறிப்பிட்ட வாடகையாளரின் பெயர் உள்ளதா என்பதனை தெரிந்துக் கொள்ளலாம். இதன் மூலம் தவறான ஒரு வாடகையாளரை தவிர்க்கலாம். இன்றைய இறுக்கமான பொருளாதார சூழ்நிலையில் தகுந்தவர்களை தெரிவு செய்வது எதிர்கால நெருக்கடியை தவிர்க்க உதவும்.