அண்மைக்காலமாக அதிகமான புதியவர்கள் கனடாவிற்குள் வந்ததனால், வாடகைக்கு தகுந்த ஆதனத்தைப் பெறுவதில் மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் வாடகையின் பெறுமதிஅதிகரித்து வருவதனால் கனடிய மக்கள் தமது மற்றைய தேவைகளிற்கு போதியளவு பணம் இல்லாமல் இருப்பதாக இன்றைய புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. குறிப்பாக மாணவர்களாக கனடாவிற்கு வந்தவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இது ஒரு ஆரோக்கயமான சமூகத்திற்கு சிறந்ததல்ல. சமுதாய நெருக்கடியை உருவாக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கன்றார்கள். Purpose built rentals என அழைக்கப்படும் (Apartments) அடுக்குமாடி கட்டிடத் தொகுதியின் வாடகையை நோக்கி மக்கள் அதிகம் செல்வதாக தெரிய வருகின்றது. அடுக்குமாடி கட்டிடத்தொகுதியை நோக்கி வாடகைக்கு செல்பவர்களின் எண்ணிக்க அடுக்குமாடி மனை (Condominium Apartment Units) அல்லது சாதாரண வீடுகளை விட அதிகமாக செல்வதற்கு பல காரணங்கள் உண்டு.

கனடாவில் குறிப்பாக, வாடகைக்குரிய அடுக்குமாடி கட்டிடத் தொகுதிகள் பழமையானவை. அநேகமாக 1990 ஆண்டுகளிற்கு முன்பாக கட்டப்பட்டவை. இவை பழைய தொகுதிகள். வாடகை பொதுவாக குறைவாக இருக்கும். அத்துடன் வாடகை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது (Rent Control).

நவம்பர் 15 |2013 இற்கு முற்பட்டதாக குடிபெயர்ந்த வீடு மற்றும் மனைகளிற்கு வாடகை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வருடாவருடம் மாகாண அரசு கொடுக்கும் பெறுமதியை விட அதிகரிக்க முடியாது. உதாரணமாக 2024 இன் ஆகக் கூடிய வாடகை அதிகரிப்பு 2.5%.

அதாவது, வாடகை $2000 ஆக இருந்தால் அதிகூடிய வாடகை அதிகரிப்பு $50 மட்டுமே. அத்துடன் அடுக்குமாடி வாடகைத் தொகுதி அலகுகள் / கட்டிடங்கள் அனுபவமிக்க ஒரு நிறுவனத்தால் எப்பொழுதும் பராமரிக்கப்படும். ஆனால், அடுக்குமனைகள், பொதுவாக குறிப்பிட்ட நபர்களால் (Owners) அல்லது அவர்களின் பிரதிநிதிகளால் (Relators) பராமரிக்கப்படும்.

1990 ஆண்டுகளிற்கு பிற்பாடு Purpose built rentals களின் நிர்மாணம் மிகப்பெரிய அளவில் குறையத் தொடங்கி விட்டது.

அடுக்குமாடி மனைகளில் (Condominium Unit) முதலீட்டாளர்களிற்கு அதிக வருமானம் வந்ததனால், அதனை நோக்கி அவர்கள் முதலீடு செய்ததனால் Pupose Built Rentals குறைந்து விட்டது. அண்மையில் மாகாண அரசு Purpose Built Rentals கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் அனுகூலம் எவ்வாறு இருக்கும் என எதிர்காலத்தில்தான் தெரியவரும்.

அண்மைக்காலத்தில் வாடகைக்கு வருபவர்கள் குறிப்பிட்ட மனை மற்றும் வீடு வாடகை மட்டுப்படுத்தப்பட்டதா(Rent Control) என்பதில் மிகவும் கவனமாக உள்ளார்கள். ஏனெனில், வாடகை மட்டுப்படுத்தப்படாமல் இருப்பின், பேராசையான முதலீட்டாளர்கள் வாடகையை நியாயமற்ற முறையில் அதிகரிப்பதனையும் காணலாம்.

அதிகமான மாணவர்களின் அண்மைக்கால வரவு, Visitor Visa இல் வந்தவர்களின் அதிக எண்ணிக்க , சிலகாலம் தொழில் புரிவதற்காக (Temporary Workers) வருபவர்கள், புதிய வரவாளர்கள் (Permanent Residences) போர்நடக்கும் நாடுகளில் இருந்து வருபவர்கள் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வாடகைக்கு தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

இன்றைய காலத்தில் இதன் எண்ணிக்க அதிகரிக்கும் என்றே தெரிய வருகின்றது. இதனால் வாடகைக்கு நெருக்கடி தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஒன்ராறியோ அரசு, இந்த நெருக்கடியை குறைப்பதற்கு பல சலுகைகள், 2019இல் பல மாற்றங்களை செய்து வருகின்றது. எனினும் உள்ளூராட்சி அரசுகளின் மெத்தன போக்கால் காலம் தாழ்த்தப்படுவதனையும் காணக்கூடியதாக உள்ளது.

சகல அரசுகளும் சேர்ந்து முடிவுகளை எடுக்காமல் இருந்தால், நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவ்வளவு இலகுவாக இருக்க முடியாது.

வாடகை அதிகரிப்பதால், ஆதன விலையும் அதிகரிக்கும். நீண்ட காலத்தின் ஆதன விலையும் அதிகரித்தே செல்லும் என்பதும் தவிர்க்க முடியாதது.