பொதுவாக கனடியர்கள் ஏழு (7) வருடத்திற்கு ஒருமுறை தமது இருப்பிடத்தை மாற்றுவது வழமையாக இருந்து வருகின்றது. ஆனால், அண்மையில் குறிப்பாக கடந்த இருவருடங்களில் ஏற்பட்ட அதிக வட்டிவீத அதிகரிப்பும், விலை அதிகரிப்பும் இப்பொழுதும் முன்பு மாதிரி இது இருக்குமா? என்பது கேள்வியாக உள்ளது.
இன்றைய புள்ளி விபரங்களின் பிரகாரம் ஏழு (7) வருடங்கள் என்ற காலம் நிச்சயமாக அதிகரிக்கும் என்று தெரியவருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக கனடியர்களின் வயது கூடிய நீண்டகால வாழ்க்கை முறை, அதிக அடமானக் கடன் வட்டி வீதம், விலை அதிகரிப்பு போன்றவற்றை கூறலாம்.
பொதுவாக கனடியர்கள் தமது வாழ்வில் மொத்தமாக 4.5 தொடக்கம் 5.5 வரையான ஆதனங்களை தமது வாழ்வில் உரிமையாக்கியுள்ளார்கள்.
பொதுவாக 25 வயதில் தொடங்கி 65 வயதில் தமது இறுதி ஆதனத்தை வாங்குவதாகவும் கொள்ளலாம். இது கடந்தகால புள்ளிவிபரங்கள்.
2021/2022 இன் கணக்கின்படி 870,000 ஆதன உரிமையாளர்கள் தமது இருப்பிடத்தை மாற்றியுள்ளார்கள். ஏறக்குறைய 15 மில்லியன் மொத்தமாக உள்ள கனடிய ஆதனங்களில் 870000 கை மாறியுள்ளன. கனடியர்களில் ஆதனம் உரிமை கொள்பவர்கள் 66.5% ஆகும். எனவே உரிமை கொள்ளும் ஆதனங்கள் 10 மில்லியன் ஆகும்.
CMHC இன் 2023 இன் அறிக்கையின் பிரகாரம், 2021 இல் தமது ஆதனத்தை மாற்றம் செய்தவர்கள் 13.5%.
இதே பெறுமதி 2020 இல் 15.5%. அதாவது, 2% இனால் குறைந்துள்ளது.
இதற்கு இன்னுமொரு காரணம், தகுந்த ஆதனத்தை கண்டுபிடிப்பதும், அதனை வாங்குவதிலும் அடமானம் பெறுவதிலும் ஏற்படும் நிலைப்பாடும், இறுக்கமான நிலைமையும் ஆகும்.
இதனால் எதிர்காலத்தில நகரங்களை தவிர்ந்த பகுதிகளிற்கே கனடியர்கள் செல்லவேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் அலபேட்டா மற்றும் அட்லாண்டிக் மாகாணங்களை எதிர்காலத்தில் கனடியர்களின் தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாக காணப்படலாம்.
முன்பு எல்லாம் ஒன்றாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களே கனடியர்களின் முதல் இரு தேர்வுகளாகக் காணப்பட்டன. ஏறக்குறைய 40.5 மில்லியனைக் கொண்ட கனடாவில் 50% இற்கு மேற்பட்ட ஆங்கிலம் பேசும் மக்கள் இந்த மாகாணங்களில் வாழ்வதோடு அதிகமாக மக்கள் விரும்பும் பிரதேசங்களாகவும் காணப்படுகின்றது. அத்துடன் பொதுவாக மக்கள் இளைஞர்களாக இருக்கும்போதே அதிகமாக இடம்மாறுவதனை விரும்புவார்கள். ஆனால், கனடாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இடமாற்றம் தடைபடுவதற்கும் காரணமாகலாம்.
இப்பொழுதும் அதிகளவிலான வீடு/மனைகள் நிர்மாணங்கள் செய்வதனைக் காணலாம். இவை வட்டிவீதம் 2% இலிருக்கும் போது விற்கப்பட்டு / வாங்கப்பட்டவையாகும். ஆனால், கடந்த இருவருடங்களாக 6% ஆக வட்டிவீதம் இருக்கும் போது நடைபெற்ற வியாபாரங்கள் அல்ல.
இதனால், எதிர்காலத்தில் நிர்மாணம் செய்யப்படும் ஆதனங்களின் எண்ணிக்கையும் குறைவடையும். இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் ஆதனப்பற்றாக் குறையை எதிர்பார்க்கலாம்.
இதனால் ஆதன விலையிலும், வாடகையிலும் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். எது எவ்வாறாயினும் கனடியர்களில் ஒரு பகுதியினர் ஆதனம் வாங்குவதிலும், விற்பதிலும் நாட்டம் கொண்டே இருப்பார்கள். அத்துடன் புதிதாக கனடாவிற்கு வருபவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் நிச்சயமாக வாங்குவதனைத் தவிர்க்க முடியாது.
எது எவ்வாறாயினும் ஆதன முதலீடு என்பது நீண்டகால எதிர்பார்ப்பு.
தகுந்த ஆதனத்தை தகுந்த இடத்தில் தமது வசதிக்கேற்ப, வாங்குவது நிச்சயமாக எதிர்கால வாழ்வை பிரகாசமாக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.