உலகைக் காக்கும் நீரின் உன்னதத்தை, இவ்வுலகின் மூத்தமொழியால் வர்ணிக்கும் அழகே அழகு….
எது பற்றியது உமது கவிதை என நீர் வினவினால் நீரே பதில்
ஏனெனில் நான் நீர்
புனல் என கூறினால் புரிகிறதா?
வெம்மையால் வெந்நீர் தன்மையால் தண்ணீர்
இன்னும் விளங்கவில்லை What என்கிறீரா?
Water தான் நான். இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
புவிதனில் நான் புதிதும் அல்ல; புதிரும் அல்ல
யாரும் அறிந்தவளே.
உலகை உறுதியாய் பற்றியவள் நான்; அதே உலகை
உறுதியாய் எனை பற்றவைத்தவள் நான்.
உம் உதிரத்தின் உரமாய் இருப்பவள் நான்
உம் உமிழ்நீராகவும் இருப்பவள் நான்
நீர் இளைப்பாறும்போது தேநீரும், இளநீரும் கூட நான்.
வெளியேற்றும் சிறுநீரும், கண்ணீரும் நான்.
எங்கும் எதிலும் நான்; ஏனெனில், நான் இன்றி அமையாது உலகு.
திட, திரவ, வாயு என யாவுமாய் நான்.
திரும்பும் திசை எங்கும் திரவியமும் நான்
ஆக்கம் தரும் அமுதும் நான்; அங்கே அழிவு தரும் ஆழியும் நான்
ஆக்கமானவள், ஆழமானவள், ஆபத்தானவளும் கூட.
நிறமற்ற நீருக்கு நிதமும் இல்லை உருக்கல்
நிறம்மாறி உருமாறும் உதவா மனிதர் மத்தியில்
நிறமற்று உருவற்று இருப்பதேமேல் எனக்கு.
வீழ்ந்தாலும் வனப்புண்டெனில் அது அருவிக்கே
தாழ்வைத் தேங்கினாலும் பயன் உண்டெனில் அது நீருக்கே.
வெள்ளைப் பாகாய் திடம்கொண்டு மேலிருந்து வீழும்போது
கணம் கொண்டு தன்அடியில் குளிப்பவர் தலையில் கொட்டு வைத்து
தன் வலியை மதிப்பவர்களை தள்ளி விட்டு
மனம்போன போக்கில்… ம்.. இல்லை மணல்போன போக்கில்…இல்லை
மடைதிறந்த வெள்ளத்திற்கு போக்கம்தான் உண்டோ?
இடம் என இருந்தாலே இறங்கிவிடுவேனே நான்.
ஆனால்… அறுக்கும் அறிவுரையை நானும் கூறுகிறேன்..
அனுபவப்பட்ட என்னிடமிருந்து அருவியிட்டு கொள்ளுங்கள்.
மடை திறக்கப்பட்டதே என மடத்தனமாய் இறங்கி விட்டேன்
இடம் பாராமல்….
ஒருபுறம் ஆதரவாய் ஆறாகி ஒருவழியாய் ஒருவனுக்கு சோறானேன்
மறுபுறம் மயக்கத்தில் திளைத்து வேராகி, சேறாகி சாக்கடையும் ஆனேன்
ஏனெனில், வழிநடத்த எனக்கும் ஒரு வாத்தியார்தான் இல்லையே….
அணைக்கட்டி அணைவைத்து சண்டையிடத்தானே ஆட்கள் இருக்கிறீர்கள்!
பொதுவாய், சமமாய் மழையாய் பொழிந்தால்
களர் நிலத்திற்கு பயன்பட மாட்டேன் என கலாய்த்து விட்டார்கள்
வளம் பெருக்க வந்த நீரை நீர் குடிக்கும் கலருக்காக மாற்றி விட்டீர்கள்
கட்டுக்கடங்காத காட்டாற்றை குட்டிக் குடுவையில் கட்டி கடையில் வியாபாரம் செய்கிறீர்கள்
நிலம்தனில் நிதமும் நிலவி அனைவருக்கும் பசியாற்றவே நசை எனக்கு
எனை வைத்து உங்களுக்குள் வசை எதற்கு?
காவிரி ஆகிய நான் கருநிலத்திற்கும், திருநிலத்திற்கும் பொதுவானவள்
கருத்து வேறுபாடு என கருவிலே கை வைக்கலாமா?
சாக்கடையில் இருந்தபோது கூட நான் சாவதாய் உணர்ந்ததேயில்லை
என் கண்எதிரே என்பிள்ளை அங்கு பசியில் இருக்க
உன் கண்எதிரே நான் வீணாய் கடலில் கலக்கும்போது
கொடூரமாய் கொலை செய்யப்படுவதாக உணர்கிறேன்
பகிர்ந்து பசியாறுங்கள்! பறித்து பசியாறாதீர்கள்!!
உணர்வற்ற நான் உணர்வு கொண்டு பேசிவிட்டேன்
உயிரற்ற நான், உயிர்காக்கும் நான்…. உனக்காக பேசிவிட்டேன்
நீராகிய நான் பேசினால் போதாது; நீர் பேசினால் நனிநன்று..